கடந்த 2 நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு பாட்டியும், பேத்தியும் அழுகும் படம் வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தான் இது. பக்தி என்ற பள்ளிச்சிறுமி தனது பள்ளி நண்பர்களுடன் உற்சாகமாய் சுற்றுலாவிற்கு புறப்பட்டுச்சென்றார். முதியோர் இல்லத்திற்கும் செல்லும் சுற்றுலாப்பயணம் அது. வயதான நபர்களிடம் எப்படி பழகவேண்டும், அவர்களுக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும், வீட்டில் உள்ள முதியவர்களை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் போன்ற நல்ல பழக்கங்களை கற்பிக்கும் வகையில் அந்த சுற்றுலாப்பயணத்திற்கு மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
பக்தி தனது பாட்டி தமயந்தியுடன் சிறுவயது முதலே பிரியத்துடன் வளர்ந்தவர். அவருக்கு பாட்டி என்றால் உயிர். ஆனால் ஒருநாள் வீட்டில் பாட்டியை காணவில்லை. பாட்டி எங்கே என்று வீட்டிலிருந்தவர்களிடம் கேட்டபோது, தூரத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து பல மாதங்களாக பக்தி, பாட்டி எப்போது வருவார்? என்று ஏக்கத்துடன் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்த முதியோர் இல்ல சுற்றுலாப்பயணம் சென்றுள்ளார் பக்தி. பாட்டியின் மீது பிரியத்துடன் இருந்த பக்தி, முதியோர் இல்லம் சென்றதும் அங்கிருந்த பாட்டிகளுடன் அன்புடன் பழகியுள்ளார். அப்போது தூரத்தில் ஒரு பாட்டி, தனது பாட்டியைப்போல் இருப்பதை பக்தி கண்டுள்ளார். அருகே சென்ற பார்த்தபோது, அது தனது பாட்டியேதான் என அறிந்ததும் பக்தி ஆடிப்போனார்.
அந்த நிமிடம் அவர் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் மட்டுமே சிந்தியது. ஏன்? பாட்டி இங்கே இருக்கின்றீர்கள் எனக்கேட்டு பக்தி அழுதுள்ளார். அதற்கு உறவினர்கள் தன்னை இங்கே சேர்த்துவிட்டு சென்றுவிட்டதாகக்கூறி பாட்டி தமயந்தியும் சிறுபிள்ளை போல் அழுதுள்ளார். பக்தியுடன் சேர்ந்து அவரது தோழிகளும் அழுதுள்ளனர். இதனால் அந்த முதியோர் இல்லமே பாசத்தால் பிணைந்த சோகமயமானது.
இதையடுத்து தனது வீட்டில் இருந்தவர்களிடம் கடுமையாக சண்டையிட்டு, பாட்டியை வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார் பக்தி. இந்த பாட்டி மற்றும் பேத்தியை தற்போது பிபிசி செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது. இந்த பேட்டியுடன், 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படங்களையும் அந்த செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதையே தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி அனுதாபங்களையும், ஆதங்கங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.