குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதை அடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது நடந்த வன்முறையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் ராந்திக்பூர் கிராமத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதோடு இருப்பிட வசதியுடன் கூடிய அரசு வேலை வழங்க வும் உத்தரவிட்டது.
குஜராத் அரசு ஏற்கனவே பானுவுக்கு வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஏற்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.