தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு
தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு
Published on

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா தனிப்பட்ட முடிவு இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். அத்துடன் இவர்கள் அனைவரும் கர்நாடகா சட்டப்பேரவையின் நடப்பு காலம் முடியும் வரை இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிப்பையும் விடுத்தார். 

இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்டாகி வாதாடினார். அவர், “ஒரு எம்.எல்.ஏவிற்கு அவரது பதவியை ராஜினாமா செய்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அத்துடன் தகுதி நீக்கும் தொடர்பாக பதிலளிப்பதற்கு எம்.எல்.ஏக்களுக்கு 7 நாட்களுக்கு பதிலாக வெறும் 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அது அடுத்த இடைத் தேர்தல் வரும் வரை மட்டுமே அமலில் இருக்கும். சட்டப்பேரவையின் மொத்த காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யமுடியாது” எனத் தெரிவித்தார். 

இதற்கு சபாநாயகர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகரின் நிறுவனத்தின் தனியார் விமானம் மூலம் மகாராஷ்டிராவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பாஜகவின் முழுப் பாதுகாப்பு உடன் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் தற்போது இவர்கள் இங்கு வந்து நாங்கள் இன்னும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என்று கூறுகின்றனர். இந்த ஒரு காரணமே அவர்களை தகுதி நீக்கம் செய்ய போதுமானது” எனத் தெரிவித்தார். 

இந்த வழக்கின் விசாரணை முடிந்து இதன் தீர்ப்பை கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபகளில் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி கொண்ட அமர்வு நாளை வழங்க உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com