இலவசங்கள் தொடர்பான வழக்கு - 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடர்பான வழக்கு - 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
இலவசங்கள் தொடர்பான வழக்கு - 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
Published on

இலவசங்கள் தொடர்பான வழக்கை நீதிபதி சந்திசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்கத் தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவசம் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையத்தையோ, குழுவையோ உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என்றும், அவ்வாறு அமைப்பதாக இருந்தால், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி லோதா போன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கலாம் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நாட்டில் எந்த மதிப்பும் இல்லை என்று கூறிய தலைமை நீதிபதி, தேர்தல் இலவசத்தோடு, தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் இலவசத்தை கட்டுப்படுத்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் சிங்வி, தேர்தலுக்கு பிறகு அரசு அறிவிக்கும் இலவசம், திட்டங்கள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சிக்கலானது அபாயகரமானதும் கூட என்றார். இலவசங்கள் குறித்து முடிவு எட்டப்படுவதற்கு முன் ஆழமான நீண்ட விவாதம் தேவை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரமணா, இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு குழுவை அமைக்கலாம் அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி முடிவு எட்டலாம் என்றார். அப்போது வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை எனக் கோருவதாகவும், சில கட்சிகள் இலவச அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுகின்றன என்றும் கூறினார்.

தேர்தல் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்தும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து தரப்பு கருத்தையும் கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை விரிவாக விசாரித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்றும், எனவே இந்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com