நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதே சமயம் குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் குடியரசுத் தலைவராலும், சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, நான்கு பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, கருணை மனு, மேல்முறையீட்டு மனு என குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் இருந்த நிலையில், பவன்குமார் குப்தாவை தவிர மற்ற இருவரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர்.
இதனிடையே பவன் குமார் குப்தாவும், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்ததால், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மீண்டும் மாறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.