பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக, பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத தாக்குதல்களையும் ராணுவ வீரர்களின் மரணங்களையும், தனது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக பத்திரிகையாளர் வினோத் துவா தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாகவும், இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல் எனக்கூறி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அதிசயம் என்பவர் இமாச்சல் மாநிலம் சிம்லா காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தார்
இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் துவாவிற்கு எதிராக தேசத் துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிம்லா காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தது.
தனக்கு எதிராக பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக்கோரியும் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்தும், தான் கைது செய்யப்படலாம் என்பதால் அதில் இருந்து பாதுகாக்கக்கோரியும் வினோத் துவா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த வழக்கு ஏற்கெனவே விரிவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அரசை விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக யார் ஒருவர் மீதும் தேசத்விரோத வழக்கு தாக்கல் செய்யக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நபருடைய செயல் வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம் - ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருந்தால் மட்டுமே தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தங்களது பல தீர்ப்புகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
அப்படி இருக்கும் பொழுது, பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், 'எந்தவிதமான கருத்தும் இல்லாமல் இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர் வினோத் துவாதிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது தவறு' என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அதனை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.
அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் பல பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற வினோத் துவாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
- நிரஞ்சன் குமார்