இந்தியாவில் உள்ள மத வழிப்பாட்டு தலங்களின் சுகாதார நிலவரம், சொத்துகள் உள்ளிட்டவை குறித்து நீதித்துறை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கோயில், மசூதி, தேவாலயம் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்களின் சுகாதார நிலவரம், சொத்துக் கணக்குகள், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள், இந்த தலங்களுக்கு வருபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நீதிபதிகள் அறிக்கை தயாரித்து மாநில உயர்நீதிமன்றங்களிடம் அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுநல மனுவாக கருதி உயர்நீதிமன்றங்கள் விசாரணைக்கு உத்தரவிடலாம் என உச்சநீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் கூறியிருந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான கோயில்களிலும், லட்சக்கணக்கான மசூதிகள் மற்றும் தேவாலயங்களிலும் நீதிபதிகள் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதமே இந்த உத்தரவு வெளியாகி இருந்தாலும், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள், நீதித்துறையில் உள்ள ஆள் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டால் நீதித்துறை பணிகளில் இது மேலும் தொய்வை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.