கிரிமினல் வழக்குகளை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் உள்ளடக்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையே மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் தொடர்பான பிரமாணப் பத்திரத்தில் தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்திருப்பதாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சதீஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், தன் மீதான இரண்டு குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை ஃபட்னாவிஸ் மறைத்துள்ளார். இது விதியை மீறியதாகும். எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்கே கவுல், கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக விளக்கமளிக்க தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தேர்தலில் தேவேந்திர ஃபட்னாவிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தன் மீது 22 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதுபோக 2 வழக்குகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.