கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு, தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு அனுமதி கோரி உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வரும் நிலையில் தங்களால் அதிக அளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை தனது தந்தைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்க வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பதில் அளிக்க கோரி உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணை செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அன்றைய தினம் உத்தரப்பிரதேசம் மாநில சுகாதாரத்துறை தரப்பில் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 18 வயது பூர்த்தி ஆகாத மைனர் சிறுவனால் தனது உடல் உறுப்பு தானத்தை வழங்க முடியுமா? என்பது குறித்து உரிய ஆய்வு செய்யுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையும் படிக்க: இங்கிலாந்தின் 2-ம் மகாராணியாக எலிசபெத் தேர்வாக காரணமான சம்பவம் இதுதான்!