நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டரில், நீதிபதி ஹெல்மெட் அணியாதிருந்தது குறித்தும் முகக்கவசம் அணியாதிருந்தது குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரணையில் நீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என பூஷன் வாதத்தினை முன்வைத்திருந்தார்.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வரும் நிலையில் தற்போது இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த மாதிரியான தண்டனைகள் என்பது குறித்த தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.