உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், VVPAT அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தோராயமாக 5 VVPAT -கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புகை சீட்டு, வாக்கு இயந்திரத்திரத்துடன் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில், அனைத்து VVPAT -களில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 24 லட்சம் VVPAT வாங்க மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் போதும், 20 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுவதாக மனுதாரர் வாதிட்டார்.
உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றினால் 5 முதல் 6 மணி நேரத்தில் VVPAT -களை சரிபார்க்க முடியும் என்றும், இது வாக்காளர்களுக்கு நம்பிக்கையை கூட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.