ஸ்டேட் வங்கி ரூ76,600 கோடி வாராக்கடனை 220 வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன்கள் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிடலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆர்டிஐ மூலம் வாராக்கடன் குறித்த தகவல்களை பெற்று வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.100 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பி செலுத்த முடியாமல் திவால் ஆனவர்களின் கடன்களை எந்தெந்த வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இந்த தகவலின்படி ஸ்டேட் வங்கியானது ரூ100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 220 கடனாளிகளின் ரூ76,600 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், ரூ500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள கடனாளிகளின் ரூ37,700 கோடி ஸ்டேட் வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய 980 வாடிக்கையாளர்களின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே 220 பேர். அதாவது ஐந்தில் ஒருபங்கு. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சராசரியாக ரூ348 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய 94 வாடிக்கையாளர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மொத்த தொகை ரூ27,024 கோடி. அதேபோல், ரூ500 கோடிக்கு மேல் கடன் பெற்ற 12 தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் 9,037 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளிடம் இருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ2.75 லட்சம் கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.