‘பாரத் ஜோதா யாத்திரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார்.
குமரி முதல் காஷ்மீர் வரையில் மூவாயிரத்து ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பயணத்தை 150 நாட்கள் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை பயணம் தற்போது 14வது நாளை எட்டியிருக்கிறது.
அதன்படி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போஸ்டர் பேனர்கள் ஒட்டி வரவேற்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா பகுதிக்கு ராகுல் காந்தி வரவிருந்த நிலையில் அங்கு கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது. அதில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் கொண்ட போஸ்டரில், பாஜகவினர் ஹீரோவாக நினைக்கும் சாவர்க்கரின் புகைப்படத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு பதிலாக வைத்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்த புகைப்படம் தொடர்பான ஃபோட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் படு வேகமாக பரவத் தொடங்கியதோடு, ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக்கடிதம் எழுதிய சாவர்க்கரின் புகைப்படத்தை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சமமாக காங்கிரஸாரே வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.
இதனையடுத்து போஸ்டர் அச்சிடுவதில் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் காந்திக்கு பதில் சாவர்க்கரின் படம் தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் கொடுத்ததோடு சாவர்க்கர் இருந்த படத்துக்கு மேலே காந்தியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.