பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது - மத்திய அரசை விமர்சித்த ஆம் ஆத்மி

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது - மத்திய அரசை விமர்சித்த ஆம் ஆத்மி
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கைது - மத்திய அரசை விமர்சித்த ஆம் ஆத்மி
Published on

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில், 4 கோடியே 81 லட்சம் ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினருக்கும், அவரது நிறுவனங்களும் இதன் மூலம் பயன் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், சத்யேந்திர ஜெயினை கைது செய்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியினைச் சேர்ந்த சத்யேந்திர ஜெயின், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக உள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு தனக்குக் கிடைத்த தகவலின்படி விரைவில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படலாம் என்று கூறி இருந்தார். முன்பு சத்யேந்திர ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றும், இருப்பினும் அவரை கைது செய்தால் சட்டப்படி அதை எதிர்கொள்வோம் என்றும் கூறி இருந்தார்.

சத்யேந்திர ஜெயின் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே மத்திய அரசு அவரைக் கைது செய்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் மாதத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப்பை எடுத்து போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com