''பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் வகையில் இருப்பதால், 'சர்தார் உதம்' படத்தை ஆஸ்காருக்கு தேர்வு செய்யவில்லை'' என்று ஆஸ்கார் விருதுக்கான நடுவர் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஜாலியன் வாலாபாக்' நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'சர்தார் உதம்'. சுர்ஷித் சிர்கார் இயக்கத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் நடந்த ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் சர்தார் உதம் திரைப்படம் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்கார் விருது தேர்வுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள, இந்திரதீப் தாஸ்குப்தா கூறுகையில், ''இந்தப் படம் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பை சித்தரிக்கிறது என்பதால் தேர்வாகவில்லை'' என்றார்.
நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ''ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைப் பற்றிய சர்தார் உதம் திரைப்படம் நீளமாக இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெளிக்காட்டப்படாத ஒரு ஹீரோ குறித்து எடுப்பது நேர்மையான முயற்சி. ஆனால் அது மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உலகமயமாக்கல் காலத்தில், இந்த வெறுப்பை பிடிப்பது நியாயமில்லை. படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு உறுப்பினர் சுமித் பாஸூ, ''அந்த காலக்கட்டத்தின் சித்தரிப்பு, கேமிரா, எடிட்டிங், சவுண்ட் டிசைன், உள்ளிட்ட சினிமேட்டிக் குவாலிட்டி காரணமாக சர்தார் உதம் திரைப்படம் பல்வேறு தரப்பு மக்களால் பாராட்டப்பட்டது. படத்தின் நீளம் பிரச்னையாக இருக்கிறது. தாமதமான க்ளைமேக்ஸூம் இதற்கு காரணம். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் தியாகிகளின் உண்மையான வலியை ஒரு பார்வையாளர் உணர நிறைய நேரம் தேவைப்படுகிறது.
படத்தை நிராகரித்ததற்கான காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ''உண்மை எப்போதும் கசக்கும்'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர், ''படம் எதார்த்தை வெளிப்படுத்தவில்லையா?. முதல், இரண்டாவது உலகப்போர் பற்றிய படமாக இருந்தால் என்ன செய்வீர்கள்?ஹிட்லரின் ஜெர்மனியின் யதார்த்தத்தை சித்தரிப்பதால் நீங்கள் அதை நிராகரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
| தொடர்புடைய கட்டுரை: ஓடிடி திரைப் பார்வை 6: Sardar Udham - உலராத ரத்தச் சரித்திரமும், உன்னதப் போராளியும்! |