டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையின் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 4ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 6 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதன்மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றபோது, உச்சநீதிமன்றம் சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பாஜக தலைமை சதித் திட்டம் தீட்டியது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகவ் மகுண்டாவை கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பொய்யான அறிக்கையை வழங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்தது. ஆனால் அவர் மறுத்ததால், அவரது மகன் ராகவ் ரெட்டி கைதுசெய்யப்பட்டார்.
இதையடுத்து தொடர்ச்சியான கேள்விகளுக்கு மத்தியில் ராகவ் ரெட்டி கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பொய்யான தகவல்களைத் தந்தார். இதன்மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம், அக்கட்சியின் மூத்த தலைமை இதில் ஈடுபட்டுள்ளது. கெஜ்ரிவால் நேர்மையான வாழ்க்கையை நடத்தியவர். நல்ல கல்வி மற்றும் டெல்லி மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி உள்ளிட்ட சிறையில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் சஞ்சய் சிங்.