இந்தியா-சீனா மோதலில் பிரதமரின் மவுனம் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சீன தரப்பிலும் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என மொத்தம் 43 பேர் இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இந்த மோதல் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியா-சீனா மோதலில் பிரதமரின் மவுனம் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாங்கள் என்ன செய்தோம்? சீனா இந்திய எல்லையைத் தாண்டிவிட்டதா, தேசம் அறிய விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "எல்லையில் என்ன நடந்தாலும் அதற்கு ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்க முடியாது. 20 ராணுவ வீரர்கள் தியாகத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பு. பிரதமர் எடுக்கும் எந்த முடிவையும் அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும். ஆனால் என்ன தவறு நடந்தது என்பதை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.