சந்தேஷ்காலியில் ஆளுநர் போஸ்; மம்தா அரசுக்கு எதிராக புயலை கிளப்பும் பாலியல் வன்கொடுமை புகார்!

மேற்கு வங்க சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, அம்மாநிஅல் அரசு டிஐஜி அந்தஸ்து பெண் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சந்தேஷ்காலி மக்கள், ஷாஜகான் ஷேக்
சந்தேஷ்காலி மக்கள், ஷாஜகான் ஷேக்ட்விட்ட்ர்
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ஷேக். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரான இவரது வீட்டுக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஷேக்கின் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷாஜகான் ஷேக் தலைமறைவாகிவிட்டார். அவரை மேற்குவங்க காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதற்கிடையே ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராகப் பாலியல் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாள்களாக சந்தேஷ்காலி பகுதி பெண்கள், ஷாஜகான் ஷேக் மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு மற்றும் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பது தொடர்பாகக் குற்றச்சாட்டு வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று அப்பெண்கள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் தீ வைத்ததால், கடந்த பிப்ரவரி 9 அன்று போராட்டம் வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ்காலிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், “இங்கு நான் பார்த்தது பயங்கரமானது, அதிர்ச்சியானது. என் உணர்வுகளை நொறுக்கிவிட்டது” என்று கூறினார். மேலும், “நான் பார்த்திருக்கக் கூடாத ஒன்றைக் கண்டேன். கேள்விப்படாத பல விஷயங்களை கேள்விப்பட்டேன்; தாகூரின் மண்ணிலா இப்படி நடந்தது. என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

அதேபோல், சந்தேஷ்கலியில் ஹிந்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்தே ஆக வேண்டும் என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ரானி கூறியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, மேற்கு வங்க அரசு டிஐஜி அந்தஸ்து பெண் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ’சந்தேஷ்காலிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே மாநில மகளிர் ஆணையக் குழுவை அங்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் திரும்பி வந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். வன்முறையைத் தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் பார்த்தா பௌமிக் தலைமையிலான குழு நாளை பிற்பகல், சந்தேஷ்காலிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்வர் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, சந்தேஷ்காலி பாலியல் கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து 48 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம், மேற்கு வங்க அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக போராட்டம் நடத்திய பெண்களை அம்மாநில மகளிர் ஆணையத் தலைவர் லீனா கங்கோபாத்யாய், மற்றொரு உறுப்பினர் சந்தேஷ்காலிக்கு நேரில் வந்து புகார் தெரிவித்த பெண்களுடன் விசாரணை நடத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com