கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ’சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது முதல் வெடித்தது இந்த ’சனாதனம்’ குறித்த விவாதம். கிட்டதட்ட இரண்டு வாரங்களை எட்டிய நிலையில், இந்த விவாதம் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே சனாதனம் பேச்சுகள் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அமைச்சர் உதயநிதியில் ஆரம்பித்த நெருப்பு திமுகவே நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் அது அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. திமுக - பாஜக இடையே கருத்து மோதலாக இது தொடர்கிறது. பாஜக தரப்பில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் நேற்று (செப்.14) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”I-N-D-I-A கூட்டணி, சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மம் இந்தியாவை ஒன்றிணைத்து வருகிறது. ஆனால் I-N-D-I-A கூட்டணி, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர், தேசத்தை நேசிப்பவர்கள். அவர்களை எதிர்க்கும் சக்திகளை எதிர்த்துப் போரிடவேண்டும்” என்றார்.
அதுபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் இந்துக்களை அவமதித்து அரசியல் சட்டத்தை நசுக்க நினைக்கிறார்கள். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும் தினமும் கூறி வருகின்றனர்” எனப் பேசினார்.
இதுதொடர்பாக ஆங்கிலம் ஊடகம் ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “I-N-D-I-A கூட்டணி சனாதன தர்மத்திற்கு எதிரானது. இது, மக்களிடையே பிளவு மற்றும் பாகுபாடுகளை வளர்த்து வருகிறது” எனக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சனாதனத்தைப் பொறுத்தவரை பாஜக விடுவதாக இல்லை. அதுகுறித்து தற்போதுவரை கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறது. தவிர, இதுகுறித்து திமுக அங்கம் வகிக்கும் I-N-D-I-A கூட்டணியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. நேரடியாக திமுகவை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டு தற்போது அந்தக் கருத்தை வைத்து I-N-D-I-A கூட்டணியை விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக உதயநிதி உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், பல்வேறு தரப்பினர் பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
தவிர, சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் என்ன என்பது பற்றி சிபிஐ விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக உடனடியாக எடுத்து விசாரிக்கக்கோரி, இன்று (செப்.15) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இதுபோன்ற முறையீடுகள் செய்வதற்கான நேரம் முடிந்த பின்னர், வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்தனர். இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி, ‘நீதிமன்ற நடைமுறைகளை முறையாக பின்பற்றி, முறையிட வேண்டும்’ என்று வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். எனவே, வரும் 18ஆம் தேதி மீண்டும் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.