“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம் 

“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம் 
“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம் 
Published on

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், வீட்டு சாப்பாட்டையும் அனுமதிக்க ‌மறு‌த்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிணை ‌‌கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கீழமை நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக இங்கு வந்தது ஏன் என சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி சுரேஷ் கெய்த் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த கபில் சிபல், சட்டத்தை மதிக்கும் நல்ல குடிமகனாக சிதம்பரம் இருப்பதாலும், விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார் என்பதாலும், பிணை வழங்க வேண்டும் என வாதாடினார். மேலும், சிபிஐ அழைக்கும் நேரத்தில் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவார் என்றும் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறையில் இருக்கும் சிதம்பரத்தை ஒரே வாரத்தில் இருமுறை அவர்களது குடும்பத்தினர் சந்தித்துள்ளனர் என்றும், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில், அவருக்கு பிணை வழங்கக்‌கூடாது என்றும் வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 7 நாட்களில் வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதையடுத்து வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்திற்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அது தான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த கபில் சிபல், “நீதிபதி அவர்களே, சிதம்பரத்திற்கு 74 வயது ஆகிறது” எனத் தெரிவித்தார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா“சவுதலாவும் வயதானவர்தான். அவரும் அரசியல் சிறை கைதி தான். எவரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com