வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள் சக்கா ஜாம் என்ற நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். சக்கா ஜாம் போராட்டம் திட்டமிட்டபடி பகல் 12 மணிக்கு தொடங்கியது. பஞ்சாப் மாநிலம் அமித்ஸர். மொகாலி உள்ளிட்ட சில முக்கியமான இடங்களில் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உ.பியில் இந்த போராட்டம் நடைபெறவில்லை. அதனால் அந்த பகுதிகளில் யாரும் போராட வேண்டாம் என்று விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதையும் பார்க்க முடிகின்றது. ராஜஸ்தான், டெல்லி, ஹரியானாவை இணைக்கக் கூடிய சுல்தான்பூர் உள்ளிட்ட சில முக்கியமான பகுதிகளில் விவசாயிகள் டிராக்டர்களைக் கொண்டும் உழவு வாகனங்களைக் கொண்டும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நிறைய கிராமங்களில் மாடுகளை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நகர அளவில் இந்த போராட்டம் சிறிய அளவில் இருந்தாலும், கிராமப்புறங்களில் பெரிய அளவில் இந்த போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.