சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் வீண் போகாது எனவும் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களது உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகிவருகிறது. ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அசாம் மாநிலம் லகிம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, “பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. பாஜக அரசு ஆட்சி செய்கிறது. நாங்கள் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். பிரதமர் மோடி உலக நாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த அரசு கண்டிப்பாக பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும். அசாமை இரண்டாவது காஷ்மீராக மாற விடமாட்டோம். என்.ஆர்.சி உதவியுடன் இந்தியாவிற்குள் ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றுவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.