மகாராஷ்டிராவில் புலியை சுட உத்தரவிட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கக்கோரி அம்மாநில முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதி பந்தர்காவாடா. அங்கு வனத்துறையினரால் ஆவ்னி எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் புலி அண்மையில் மேன் ஈட்டராக மாறி, 13 பேரை கொன்று தின்றதாக கூறப்படுகிறது. பொதுவாக "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுண்ட்டர் செய்து கொல்வார்கள். தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை.
அதேபோல் மகராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்படும் ஆவ்னி என்ற பெண் புலியை என்கவுண்ட்டர் செய்ய தீர்மானிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த முடிவுக்கு அம்மாநில வன உயிரின ஆர்வலர்களும், பொது மக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இறங்கிய சமூக ஆர்வலர்களும், வன உயிரின ஆர்வலர்களும் #SaveAvni #LetAvniLive என்ற ஹாஷ்டாக்குகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஆவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதி இரவு யாவத்மாவில் அப்புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவின் வனத்துறை அமைச்சர் முகந்திவார் உத்தரவின் பேரில், துப்பாக்கிச் சுடுவதில் கைதேர்ந்தவரான சஃபாத் அலிகான் அந்தப் புலியை சுட்டுக்கொன்றதாகவும் அறிவிப்புகள் வெளியானது.
இதற்கு மத்திய குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேனகா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் வனத்துறையினர் மற்றும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும், அமைச்சர் முகந்திவார் புலியை கொன்றுவிட்டார். இது அவரால் கொல்லப்படும் 3வது புலியாகும். முன்னதாக, 12 சிறுத்தைகள் மற்றும் 300 பன்றிகளும் அவரது உத்தரவால் கொல்லப்பட்டுள்ளன. அவர் இன்னும் வனத்துறை அமைச்சர் பதவியில் நீடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முகந்திவாரை அமைச்சர் பதவியில் நீக்கம் செய்ய வேண்டும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் புலி சுடப்பட்டது தொடர்பாக நிர்வாக ரீதியாக ஆய்வு செய்து வருவதாகவும், அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விலங்குகளை காக்க வேண்டிய அமைச்சரே புலியை கொன்று, தனது பணியில் தோல்வி அடைந்துவிட்டதாகவும், புலிகளை சட்டவிரோதமாக கொன்றது தொடர்பாக ஆலோசித்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.