விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டுப் பிரபலங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிந்த ஒரே ஒரு ட்வீட், அவருக்கு ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் ஈட்டித் தந்திருக்கிறது. இதன்மூலம் பொதுத் தளத்தில் அவர் பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தப் போராட்டம் குறித்து தேசிய அளவிலாக பிரச்னையாக தொடர்ந்து பேசப்பட்டது வருகிறது. இந்தச் சூழலில் பிரபல பாப் பாடகி ரியானாவின் ஒரு ட்விட்டர் பதிவு, உலக அளவில் இந்தப் போராட்டத்தின் வீரியத்தை கொண்டு சென்றது. அவரின் ஒரு ட்விட்டால், ட்விட்டர் தளமே அதிர்ந்தது. அவரைத் தொடர்ந்து உலக அளவில் பல்வேறு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து தங்களது கருத்துகளை பதிவிட்டனர். வெளிநாட்டவர்களின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் பிரச்னை தொடர்பாக வெளிநாட்டவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், தனது கிரிக்கெட் ரசிகர்களால் 'காட் ஆஃப் கிரிக்கெட்’ என்ற அழைக்கப்படும் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
அவ்வளவு தான்... நெட்டிசன்கள் வரிந்துகட்டிக்கொண்டு மீம்ஸ்களை இறக்கத்தொடங்கினர். சச்சின் ரசிகர்கள் பலரே கூட அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தனர். மறுபுறம், 'சச்சினின் வார்த்தைகள் உண்மையானவை' என்று அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஒரு கூட்டம் புறப்பட்டது. இன்னொரு தரப்பினரோ, 'அவரது அரசியல் நிலைப்பாடு விவாதத்துக்குரியதாக இருக்கலாம்; ஆனால், கிரிக்கெட் என்று வந்துவிட்டால் சச்சின் எப்போதுமே ஒரு சரித்திர நாயகன்' என்ற நிலைப்பாட்டையும் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
இப்படி நெட்டிசன்களின் கருத்துகள் மாறி மாறி பகிர்ந்துகொண்டிருந்த நிலையில், பிரபலங்களும் சச்சினின் ட்வீட் குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, சச்சினின் ட்வீட்டைப் போலவே வெளிநாட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய அணி வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், "கருத்து வேறுபாடுகள் இருக்கும் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுகத் தீர்வை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
ரியானா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சகமே உருவாக்கிய இரண்டு ஹேஷ்டேக்குகளான #IndiaAgainstPropaganda மற்றும் #IndiaTogethe ஆகியவற்றை ரவிசாஸ்திரி, கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். இதையே அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் முன்னெடுத்தனர்.
கிரிக்கெட் உலகம் ஒருபுறம் சச்சினுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இர்பான் பதான், ``அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு காவல்துறை அதிகாரியால் கொலை செய்யப்பட்டபோது இந்தியா தனது வருத்தத்தை உரிய நேரத்தில் வெளிப்படுத்தியது #Just Saying" என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல நடிகை டாப்ஸி, ``ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை சீர்குலைக்கிறது என்றால், நீங்கள்தான் உங்களது மதிப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பிரசார ஆசிரியர்களாக மாற்றம் அடையாதீர்கள்" என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.
கரூர் தொகுதி எம்.பி. ஜோதி மணி தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும்போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல, சாபம். அம்பானி, அடக்குமுறை அரசின் அடிமைகள். #SachinTendulkar" என கடுமையாக சாடியிருந்தார்.
இந்த வரிசையில் இணைந்துள்ள நடிகர் சித்தார்த், "உங்கள் ஹீரோக்களை கவனமாக, அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்துகொள்ளும் தன்மையும்தான் தேவை. எந்த நிலைப்பாட்டையும் எதிலும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரசாரம்" என எதிர்வினையாற்றியுள்ளார்
காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரசாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம்" என பிசிசிஐயைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், "போராட்டத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்வது எப்படி நாட்டின் இறையாண்மையைக் கெடுக்கும்? சச்சின் டெண்டுல்கர் தன்னைத் தவிர யாருக்காகவும் நிற்காதவர். யாரேனும் ட்வீட் செய்யச்சொல்லி செய்திருப்பார். ஹீரோக்களாக நினைப்படுபவர்கள் பெரும்பாலும் அப்படியில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
எப்படியிருந்தாலும் சச்சினின் இந்த ட்வீட் அவரை தனது இன்ஸ்பிரேஷனாக நினைத்துக் கொண்டிருந்த பெரும்பாலானோருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.
- மலையரசு