ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த மாதம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துணை முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட் திடீரென முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிரான போர்க்கொடி தூக்கினார். அவருடன் 19 எம்.எல்.ஏக்கள் சேர்ந்தனர்.
இதையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சச்சின் பைலட்டின் துணை முதலமைச்சர் மற்றும் மாநிலத் தலைவர் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் எனப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தேசிய செயலாளர் பிரியங்கா காந்தியை சச்சின் பைலட் சந்தித்ததாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் சச்சின் பைலட் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சமரசமும், மீண்டும் காங்கிரஸுடன் ஐக்கியமாவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது.