குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த ஆசிரமத்திற்கு வந்தது மிகப்பெரிய பாக்கியம் என பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து அவர் தங்கிய விடுதி வரை வழிநெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதையடுத்து, காந்தியடிகள் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த ராட்டையிலும் போரிஸ் ஜான்சன் நூல் நூற்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் "அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வந்தது எனது மிகப்பெரிய பாக்கியம்." என எழுதி கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் இங்கிலாந்து பிரதமர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்போது, இந்தியாவுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.