மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ல் சபரிமலை நடை திறப்பு! 'வெர்ச்சுவல் க்யூ' ஆன்லைன் முன்பதிவு துவங்கம். தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு புஜைக்காலம் முடிந்து இந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள மாதத்தின் கும்பம் மாத பூஜைக்காக கடந்த பிப்ரவரி மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்ததால் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் செப்டம்பர் 16ம் தேதி மாலை வழக்கமான மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
செப்டம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். 'வெர்ச்சுவல் க்யூ' மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். செப்டம்பர் 21ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நடக்கும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர்., கொரோனா 'நெக்கட்டிவ்' சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்ததற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். 'வெர்ச்சுவல் க்யூ' மூலம் முன்பதிவு செய்ய ஐயப்ப பக்தர்கள் சபரிமலையின் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது