சபரிமலை 18ம் படியில் சர்வ பாக்கியங்களையும் தரும் பிரசித்தி பெற்ற படி பூஜை நடந்தது. இதில் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2036 ஆம் ஆண்டுவரை முடிந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் கொரோனா விதிகளின்படி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை பூஜைகளில் முக்கியமானதாகவும், பிரசித்தி பெற்றதாகவும் கருதப்படும் படிபூஜை தந்திரி கண்டராரு ராஜீவரு தலைமையில் நடந்தது. சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி, மாளிகைப்புரம் மேல்சாந்தி ஜனார்த்தனன் நம்பூதிரி ஆகியோர் நடத்திய பூஜையில் முன்பதிவு செய்த பக்தர்கள் பங்கேற்றனர்.
18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தி பூஜை செய்யப்படுவதால் சர்வ பாக்கியங்களும், நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். படி பூஜையில் பங்கேற்க ஒரு நபருக்கு ரூ. 75 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிபூஜைக்காக 18 படிகளும் சுத்தம் செய்யப்பட்ட பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்கேற்றி பூஜைகள் நடத்தப்பட்டன. ஒரு மணி நேரம் நடந்த இந்த பூஜையின்போது பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்கள் தரிசனத்திற்காக இருமுடியோடு ஏறும் படியில் ஒருமணி நேரம் பூஜை நடப்பதால், பக்தர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, கடந்த 2001ம் ஆண்டு முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிகம் வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் படி பூஜைகள் நடத்துவது நிறுத்தப்பட்டு, மாத பூஜை மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் மட்டுமே படி பூஜை நடத்தப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் படி பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி சபரிமலையில் மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜை நடந்து முடிந்ததால், ஜனவரி 16ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை ஐந்து நாட்கள் மாலை 7 மணி முதல் 8 மணி வரை தினமும் படி பூஜை நடந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால் விதிமுறைகளை பின்பற்றி கடும் கட்டுப்பாட்டுடன் தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் துவங்கிய கடந்த 16ம் தேதி முதலே படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த படி பூஜைக்கான கட்டணம் ரூ. 75 ஆயிரம் என்றாலும், படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2036ம் ஆண்டு வரை முடிந்துவிட்டதாக தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.