மகர விளக்கு பூஜைக்காக கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சன்னிதானம், பதினெட்டாம்படி, கொடிமரம், நடைப்பந்தல் ஆகியன தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கழுவிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். நடை திறக்கப்பட்டது தொடங்கி தினசரி தரிசனத்திற்கான பக்தர்களின் எண்ணிக்கை 15,000 என்றிருந்தது. கேரளாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்ததாலும் ஐயப்ப பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டும் தினசரி தரிசனத்திற்கான பக்தர்களின் எண்ணிக்கை 60 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டது. சராசரியாக தினசரி 45 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சபரிமலையில் தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியோடு ஐயப்ப பக்தர்களின் 41 நாள் விரத காலம் முடிந்து மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையடுத்து சபரிமலை நடை டிசம்பர் 26-ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. இன்று (30.12.21) மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜை காலத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் தரிசனம் செய்து திரும்பி உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றதால் சபரிமலையின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 26ஆம் தேதி முதல் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று மாலை நடை திறப்பை ஒட்டி தீயணைப்புத் துறை சார்பில் சபரிமலை சன்னிதானம், பதினெட்டாம்படி, கொடிமரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்த படுகின்றன. கூடவே கிருமிநாசினி யும் தெளிக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படட்டாலும், டிசம்பர் 31ஆம் தேதி முதல் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.