சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜை முடிந்து இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக 17 ஆம் தேதி மாலை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானம் 19 ஆம் தேதி உச்சக் கட்ட பரபரப்பை எட்டியது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணியவாதி ரஹானா பாத்திமா இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலைக்கு வந்தார். அவருடன் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதாவும் உடன் வந்திருந்தார். இவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். சந்நிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலில், பக்தர்கள் திரளாக திரண்டு சரண கோஷம் எழுப்பி, அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபரிமலை சந்நிதானம் அருகே பதற்றம் நிலவியது.
இது குறித்து உடனடியாக தலையிட்ட கேரள அரசு “அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. பெண்ணியவாதிகளுக்கு அல்ல. எனவே, போராட்டக்காரர்களுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம். சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போராட்ட பெண்ணியவாதி, மற்றொறுவர் பத்திரிகையாளர். சபரிமலை விஷயம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தது. இதனையடுத்து சந்நிதானத்துக்கு செல்ல முடியாமல், இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுவரை 8 பேர் சபரிமலைக்கு வந்ததாகவும் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆந்திராவில் இருந்து நேற்று வருகை தந்த வசந்தி, ஆதிசேஷி ஆகிய பெண்களை பம்பைக்கு 200 அடி முன்னதாகவே பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கேரளாவில் வந்திருந்த பெண் ஒருவர் கடுமையான மழை காரணமாக மலை ஏறுவதை நிறுத்திவிட்டு பாதியிலேயே திரும்பினார். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கும் நிலையில், மஞ்சு என்ற பெண் போலீஸ் பாதுகாப்பு கோரினார். ஆனால் அவரின் பின்புலம் விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குகள் பதிவாகி இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் இரண்டு பெண்கள் பக்தர்களின் போராட்டத்தினாலும், ஒருவர் நிலைமை கருதி தானாகவும் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் 10 வயதுக்குள்ளே இருக்கும் சிறுமிகளும், 50 வயதை கடந்த பெண்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி ஐப்பசி மாதப் பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகிறது. இத்துடன் கோவிலின் நடை மண்டலப் பூஜைக்காக அடுத்தமாதம் திறக்கப்படும்.