கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு சந்நிதானத்தின் நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இன்றைய தினம் மற்ற விஷேச பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
சபரிமலையில் பிரசிதிபெற்ற மகர விளக்கு பூஜையின் உலகப் பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரினம் ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 16 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். பின் 20 ஆம் தேதி பந்தளம் ராஜ வம்சத்தினர்களின் தரிசனத்திற்குப் பின்பு கோயிலின் நடை அடைக்கப்படவுள்ளது. இந்நிலையில் சன்னிதானம், நிலக்கல், பம்பை பகுதியில் பெண் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அசம்பாவிதம், வன்முறை தடுப்பதற்காக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.