சபரிமலையில் பரிகார பூஜை செய்தது ஏன் என்பது பற்றி திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு தலைமை தந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் ஜனவரி 2 ஆம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததைத் தொடர்ந்து, கோவிலை புனிதப்படுத்தும் பரிகாரப் பூஜை நடத் தப்பட்டது. தலைமை தந்திரி கண்டரூ ராஜீவரு இந்த பரிகாரப் பூஜையை நடத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "இந்த பரிகார பூஜை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதுகுறித்து தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது விளக் கத்தை கேட்டபின், நடவடிக்கை எடுக்கப்படும்" என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம் போர்டுக்கு, 11 பக்க விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‘‘சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல மகரவிளக்கு விழா காலங்களில் பல பிரச்னைகளை ஐயப்பன் கோயில் சந்தித்த தால் கோவிலின் புனிதத்தை மீட்க, பரிகார பூஜை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி பூஜை நடை பெறவில்லை, 1ஆம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2 ஆம் தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. இரண்டு பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது ஆதாரமற்றது. பரிகார பூஜை தொடர்பாக தேவசம் போர்டிடம் அனுமதி கேட்க வேண்டிய தேவையில்லை. அந்த நேரத்தில் அங்கு இருந்த தேவசம் போர்டு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிட்டுதான் இந்த பூஜையை நடத்தினோம்’’ என்று கூறியுள்ளார்.