“சபரிமலை எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது” - கேரள உயர்நீதிமன்றம்
சபரிமலை எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது என்றும் யாருக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்திற்கு பெண்கள் சிலர் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை எதிர்த்து, பக்தர்களின் தொடர் போராட்டங்களால் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் வழிபடுவதற்கு தடைவிதிக்க வலியுறுத்தி கேரள பாஜக தலைவர்களுள் ஒருவரான டி.ஜி.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, “சபரிமலை எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது. எந்த மதத்தினருக்கும் தடைவிதிக்க முடியாது. அப்படி தடை விதித்தால் அது மதச்சார்பின்மையின் மாண்பை சீர்குலைத்துவிடும். இந்த மனுவே சமுதாயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம்.
இருமுடி கட்டாமல் கூட பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். பதினெட்டாம் படி சந்நிதானத்தில் நுழையதான் இருமுடி கட்டியிருக்க வேண்டியது அவசியம்” என்று நீதிபதிகள் கூறினார்.
இந்த மனு மீது கேரள அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.