சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு செல்ல பெண்கள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே ஐயப்பன் கோயிலின் ஐப்பசி மாதப் பூஜை முடிந்து நேற்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும், இதுவரை 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானம் வரை செல்லவில்லை.
இதனிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமா..? ஏற்காதா..? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களையும் ஏற்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு சபரிமலைக்கு வாடிக்கையாக செல்லும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் ஐயப்பன் கோவிலின் நடை பிரசித்தப் பெற்ற மண்டலப் பூஜைக்காக நவம்பர் மாதம் 16 ஆம் தேதி (கார்த்திகை மாதம்) திறக்கப்படும். இந்த நாளில்தான் ஐயப்பன் பக்தர்களை அனைவரும் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும்.