சபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

சபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!
சபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!
Published on

சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 3 பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடை திறக்கப்படுவதால், அனைத்து வயது பெண்களும் சபரிமலை நோக்கி செல்லத் தொடங்கினர். ஆனால் 10 முதல் 55 வயது பெண்கள் கோயிலுக்குச் செல்வதை தடுக்கும் வகையில், நிலக்கல் பகுதியிலேயே போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து பெண்களை கீழிறங்கச் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இதனிடையே சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற மூன்று பெண் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலன் போராட்டம் குறித்த செய்தியை சேரிக்கச் சென்ற நிலையில், அவர் கோயிலுக்குள் தான் செல்ல முயற்சிக்கிறார் என்று நினைத்த போராட்டக்காரர்கள் சரிதா பாலனை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்தோடு மட்டுமின்றி கடுமையான இழிவான வார்த்தைகளையும் பேசி திட்டியுள்ளனர். இதுகுறித்து சரிதா பாலன் கூறும்போது, “ நான் சென்றது செய்தி கேரிக்கத்தான். ஜூன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டுதான் அங்கு சென்றேன். அப்படியிருக்க நான் எப்படி கோயிலுக்குள் செல்ல முடியும். ஆனால் அவர்கள் நான் கோயிலுக்குள் செல்ல உள்ளதாக நினைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்” என தெரிவித்தார்.

ரீபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக நியூஸ் மினிட் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி செய்தியாளர் சென்ற காரை தாக்கிய வன்முறையாளர்கள் அவர்கள் கொண்டுவந்த உபகரணங்களை தூக்கி கொண்டு சென்றுவிட்டனர். இதுமட்டுமில்லாமல் சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தியாளர் ராதிகா ராமசாமியும் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவரின் காரை அடித்து நொறுக்கிய வன்முறையாளர்கள், நாங்கள் செய்தி சேகரிக்காமல் திரும்பி செல்கிறோம் என செய்தியாளர் கூறியபோதும் அதனை கேட்காமல் கண்மூடித்தமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

முன்னதாக சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர் லிபி என்பவர் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். சபரிமலைக்கு செல்லும் மற்ற ஆண் பக்தர்கள் போலவே கருப்பு உடைகள் அணிந்து அவர் செல்ல முயற்சித்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண் ஒருவர் பம்பாவை கடந்து சுவாமி ஐயப்பன் சாலையை அடைந்தபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com