செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்திற்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 26ம் தேதி பிரதான மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 2025 ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் 'மகர விளக்கு' பூஜையும் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. 62 நாட்கள் நீண்டிருக்கும் இந்த பூஜைக்காலம் நிறைவடைந்து 2025 ஜனவரி 19ல் நடை அடைக்கப்பட இருக்கிறது.
இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், இந்த பூஜை காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 'ஸ்பாட் புக்கிங்' எனப்படும் 'உடனடி முன்பதிவு' நடைமுறையை ரத்து செய்துள்ளது கேரள அரசு. தினசரி 80 ஆயிரம் பக்தர்களை 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க கேரள அரசு உத்தரவிடுள்ளது. ஆனால் 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்களை மட்டுமே தற்போது முன்பதிவு செய்ய தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு அனுமதித்துள்ளபடி, மீதமுள்ள 10 ஆயிரம் பக்தர்களை தினசரி 'ஸ்பாட் புக்கிங்' முறையில் தரிசனத்திற்கு அனுப்ப தேவஸ்வம் போர்டு திட்டமிடுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக 'ஸ்பாட் புக்கிக்' முறையை அமல்படுத்த அனுமதி வழங்கும் அரசு உத்தரவிற்காக காத்திருக்கிறது, தேவஸ்வம் போர்டு. 'ஸ்டாட் புக்கிக்' முறையை ரத்து செய்ததற்கு கேரள எதிர்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தினசரி பத்தாயிரம் பக்தர்களையாவது 'ஸ்பாட் புக்கிங்' மூலம் தரிசனத்திற்கு அனுப்பவது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என சபரிமலையில் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 'ஸ்டாட் புக்கிங்' நடைமுறையை அமல்படுத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் பக்தர்கள் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். கடந்த மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையின் அதிகாரபூர்வ இணைய தளம் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' எனப்படும் உடனடி முன்பதிவு மூலமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் 'ஸ்பாட் புக்கிக்' முறையை கேரள அரசு ரத்து செய்துள்ளது. இதனால் பல்வேறு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நிலை பரிதாபகரமாக மாறும் எனவும் அது சபரிமலையில் மேலும் கூட்டத்தை அதிகரித்து பிரச்னைக்கு வழிவகுக்கும் எனவும் தேவஸ்வம் போர்டு கேரள அரசிடம் தெரிவித்துள்ளது. அதனால் 'ஸ்பாட் புக்கிக்' எனப்படும் உடனடி முன்பதிவு தரிசனத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அரசு அனுமதிக்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் ஐயப்ப பக்தர்களும் காத்திருக்கின்றனர்.