சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா விதிமுறைகளுடன் மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு வழங்க திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக சன்னிதானம், நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் ஐயப்பா சேவா சங்கத்தினர் சார்பில் ஏராளமான அன்னதான மண்டபங்கள் இயங்கி வந்தன. தற்போது கொரோனா காலம் என்பதால் தினசரி இரண்டாயிரம் பேரும், சனி, ஞாயிறுகளில் மூவாயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அன்னதான மண்டபங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் பசியை போக்க, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் மாளிகைப்புரம் அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அன்னதான மண்டபம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று வேளையும் ஐயப்ப பக்தர்களுக்கு "சுடச்சுட" இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.