இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தீவிரவாதி (Islamic State - IS), ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் முக்கிய தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு, கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கு, துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் ரஷ்ய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
இஸ்தான்புல் நகர் சென்ற அந்த நபர், அங்கே ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து தீவிரவாத பயிற்சிகளை எடுத்ததாக விசாரணையில் கைதுசெய்யப்பட்ட நபர் தகவல் அளித்துள்ளார். ரஷ்யா சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வருவதற்கு ஐஎஸ் இயக்கம் சதித்திட்டம் தீட்டி தீவிரவாதிக்கு பயிற்சி அளித்ததாக ரஷ்ய உளவுத்துறை கூறியுள்ளது.
இந்தியா வருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தீவிரவாதியை ரஷ்ய உளவுத்துறை கைது செய்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என்ற விவரத்தை மட்டும் ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதியை கைது செய்ததன் மூலம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை தடுத்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறை கருதுகிறது.
தற்கொலை தாக்குதல் மூலம் இந்தியாவில் பாஜக தலைவர் ஒருவரை கொலை செய்து, பெரும் குழப்பம் ஏற்படுத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சதி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத்துறை கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.