பொதுவாக இந்தியர்கள் சாப்பாடு, தூக்கம், வேலை, சுகாதாரம் என ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகளும், கேள்விகளும் எழுகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம், முதன்முதலாக இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 24 மணிநேரத்தை மக்கள் எவ்வாறு செலவிடுகிறார்கள், குறிப்பாக பல்வேறு துறைகளில் கொள்கைகளை உருவாக்க உதவியாக இருக்கும் வகையில், கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஊதியம் மற்றும் ஊதியமற்ற வேலைகளுக்கு எவ்வாறு நேரத்தை பிரித்து செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.
இந்த ஆய்வின் முடிவில், நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் மக்கள் அதிக நேரம் தூக்கத்திற்கு செலவிடுவது தெரியவந்துள்ளது.
கிராமங்களில் 6 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தோராயமாக 554 நிமிடங்கள் (9.2 மணிநேரம்) தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். பெண்கள் அதைவிட சற்று அதிகமாக 557 நிமிடங்கள் (9.2 மணிநேரம்) தூக்கத்திற்கு செலவிடுவதாக தெரியவந்துள்ளது. நகர்புறங்களில ஒப்பிடும்போது சற்று குறைவாக, ஆண்கள் 534 நிமிடங்களும், (8.9 மணிநேரம்) பெண்கள் 552 நிமிடங்களும் (9.2 மணி நேரம்) தூக்கத்திற்கு செலவிடுகிறார்கள். உணவு விஷயத்தைப் பொருத்தவரை, கிராமத்து ஆண்கள் பெண்களைவிட 10 நிமிடம் அதிகம் எடுத்துக்கொள்வதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.