மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படவில்லை என்றும், அது உண்மையில் அதன் இயல்பான போக்கைக் கடைபிடித்து வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் லுயிசின்கோ ஃபலேய்ரோ (Luizinho Faleiro) கடந்த ஆறு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 28 முறை சரிந்து, மொத்த மதிப்பில் 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 572 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. அது உண்மையில் அதன் இயல்பான போக்கை கடைபிடித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்திய ரூபாயின் மதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஏற்ற இறக்கம் இருந்தால் மட்டுமே ஆர்பிஐ அதில் தலையிடுகிறது.
பல நாடுகளைப் போல இந்தியாவும் அதன் நாணயத்தை வெளிப்புறமாக உயர்த்தவில்லை. ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் நம் நாணயத்தை வலுப்படுத்த நியாயமான முறையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளின் தாக்கத்தை நாங்கள் வேறு எந்த சக நாணயத்தையும் விட சிறப்பாக எதிர்கொண்டோம். உண்மையில், நீங்கள் இந்திய ரூபாயை மற்ற நாணயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் மதிப்பில் அது உயர்கிறது என்பதை அறிவீர்கள். எனவே சூழலைப் புரிந்துகொண்டு இந்திய ரூபாயைப் பற்றி பேசுங்கள்” என்று கூறினார்.