ஆள் பற்றாக்குறையால் அவதிப்படும் ரயில்வே துறை.. 2017-21 க்குள் இத்தனை ஆயிரம் விபத்துகளா?! பகீர் தகவல்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் சுமார் 3.11 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் ரயில்வேயில் தொலைத்தொடர்பு உதவியாளர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், தண்டவாளங்கள், சிக்னல்களை சரி பார்க்கும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவது தெரியவந்துள்ளது.
ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் உள்ள 18,881 கெசட்டட் அதிகாரிகள் பணியிடங்களில் 3,018 பணியிடங்கள் காலியாக உள்ளதும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு துறையில் 100, ர்வீஸ் இன்ஜினியர்கள் பிரிவில் 260, சிக்னல்கள் பொறியாளர்கள் பிரிவில் 154, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பிரிவில் 325, ரயில்வே டிராபிக் பிரிவில் 320 என காலியிடங்கள் கணிசமாக உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில், 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தமாக, 2,017 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக 1,392 ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இது, மொத்தம் ஏற்பட்ட ரயில் விபத்துகளில், 69 சதவீதமாகும். இந்த விபத்துகளில் 33 கோடியே, 67 லட்சம் ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதற்கு, தண்டவாளம் பராமரிப்பு, அதிக வேகம் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் பற்றாக்குறையும், ரயில் விபத்துக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.