கர்ப்பத்திலேயே கலாசார பாடமா? - மருத்துவர்களுக்கு பயிற்சியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு

கர்ப்பத்திலேயே கலாசார பாடமா? - மருத்துவர்களுக்கு பயிற்சியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
கர்ப்பத்திலேயே கலாசார பாடமா? - மருத்துவர்களுக்கு பயிற்சியளித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
Published on

ராமர், அனுமன், சிவாஜி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு படிப்பிக்க வேண்டும். அப்போதுதான் வயிற்றிலிருக்கும்போதே குழந்தைகள் நமது கலாசாரத்தை பற்றி படிப்பிக்கப்படுவார்கள் என ஆர்.எஸ்.எஸ்-இன் அமைப்பான சம்வர்தினி நியாஸ் தெரிவித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான சம்வர்தினி நியாஸ் ’கர்ப்ப சன்ஸ்கார்’(கர்ப்பகால கலாசாரம்) என்ற பரப்புரையை தொடங்கியுள்ளனர். அதில் பிறப்பதற்கு முன்பே வயிற்றிலிருக்கும் குழந்தைகள் இந்திய கலாசாரத்தை கற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் விதமாக கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள் எப்படி கற்பிக்கவேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. சம்வர்தினி நியாஸ் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதுகுறித்த நிகழ்ச்சியை நடத்தியது. அதில், 70-80 மருத்துவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் டி.என்.ஏவையே ’கர்ப்ப சன்ஸ்கார்’ மாற்றிவிடும்!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 12 மாநிலங்களில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்களில் பெரும்பாலானோர் மகப்பேறு மற்றும் ஆயுர்வேதா மருத்துவர்கள் என்று சம்வர்தினி நியாஸ் தெரிவித்திருக்கிறது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

”கலசாரம் கர்ப்பதிலிருக்கும்போதே புகுத்தப்படவேண்டும். கர்ப்பத்திலிருக்கும்போதே நாட்டுக்குத்தான் முன்னுரிமை என்பதை குழந்தை கற்றுக்கொள்வது அவசியம்” என்று வலியுறுத்தியுள்ளார் சம்வர்தினி நியாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மாரதே. தொடர்ந்து, சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜா பய் குறித்தும், அவர் ஒரு வீரனை பெற்றெடுப்பதற்கு முன்பு எப்படி பிரார்த்தித்தார் என்பது குறித்தும், அவர்போல் பிரார்த்தித்தால் இந்து அரசர்களின் குணாதிசயங்களுடன் குழந்தை பிறக்கும் என்றும் கூறினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் என்.எம்.ஆர் பிரிவின் மருத்துவர் ராம ஜெயசுந்தர் பேசுகையில், பொருளாதார வசதி கொண்ட பெற்றோருக்கு உடல்நல குறைபாடுகள் மற்றும் ஆட்டிஸம் கொண்ட குழந்தைகள் பிறப்பது அதிகரித்துவிட்டது. இது கர்ப்பத்தில் என்ன தவறு நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு இணையர் குழந்தைப்பற்றி நினைக்கத் தொடங்கியவுடனே ஆயுர்வேதா நடைமுறைக்கு வந்துவிடுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைப்பினரும், பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சமஸ்கிருதம் மற்றும் கீதையை படிப்பது கருப்பையை சுத்திகரிப்பதில் ஒரு பகுதி என்றனர். மேலும், ‘கர்ப்ப சன்ஸ்கார்’ முறையாக கற்பிக்கப்பட்டால் அது வயிற்றிலிருக்கும் குழந்தையின் டி.என்.ஏவையே மாற்றிவிடலாம் என்றனர்.

“உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானதுதான். ஆனால் கருப்பையை சுத்திகரித்தல் மற்றும் பாசிட்டிவ் சுற்றுச்சூழலை உருவாக்குதல் என்பது மிகமிக முக்கியமானது. நமது நாட்டில் ஆண்டுதோறும் 1000 கர்ப்ப சன்ஸ்கார் குழந்தைகளை பிறப்பிக்கவேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோள். இந்த முயற்சியானது இந்தியாவின் புராதான பெருமைகளை மீட்டெடுக்க உதவும். நாட்டின் குற்றங்கள் மிகவும் அதிகரித்துவிட்டது. குழந்தைகள் பெற்றோர்களை கொலைசெய்வதைப் பார்க்கிறோம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். கடவுள் ராமர் போன்ற குழந்தைகளை பெற்றெடுத்தால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைவர். நாட்டை காப்பது பெற்றோரின் கடமையும்கூட” என்று பேசியுள்ளார் டாக்டர் ரஜினி மிட்டல்.

மேலும் இந்த பயிற்சி கூட்டத்தில் LGBTQ குறித்தும், கர்ப்பகாலத்தில் குழந்தையின் பாலினம் குறித்த எதிர்பார்ப்பே தற்போது குழந்தைகள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறுவதற்கு காரணம் என்றும் பேசியுள்ளார் டாக்டர் ஷ்வேதா டாங்க்ரே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com