மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்பிலான 703 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா நகரில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலான சில நபர்கள் அதிகாரிடகளிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போதைப் பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 703 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட எம். டி. எனப்படும் மெஃபெட்ரோன் (Mephedrone) என்ற போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,400 கோடிக்கு மேல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை, போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய நபர்களை பற்றி கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர்.