பஞ்சாப்- ஹரியான எல்லையில் நடைப்பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தினை கைவிட கோரியும், அதனை தடுக்கும் வகையிலும் கண்ணீர் புகை குண்டுகளையும், கான்கிரீட் தடுப்புகளையும் அமைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதனை சாதுர்யமாக சாக்கு பைகளை தண்ணீரில் நனைத்தும், பட்டம் விட்டும் எதிர்க்கொண்டு வருகின்றனர் விவசாயிகள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியானா காவல்துறையால் போடப்பட்ட தடைகளை உடைக்க விவசாயிகள் முடிவு செய்ததால், கானௌரி எல்லை மற்றும் ஷம்பு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் கானௌரி எல்லையில் 21 வயதான இளைஞர் சுப் கரண் சிங் உயிரிழந்தார். இதற்கு காரணம் காவல்துறையினரின் தாக்குதல்தான் என்ற குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
இந்நிலையில் தற்போது உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணத் தொகையை அறிவித்து பஞ்சாப் அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மேலும் ,“உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும்.விவசாயின் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் . குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இன்றளவும் முடிவு எட்டப்படவில்லை. மத்திய அரசு சார்பாக 4 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும், அது உடன்பாட்டினை எட்டபடவில்லை. இதனால் 5 ஆம் கட்ட பேச்சுவாத்தைக்கு ,மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தும் தற்போது வரை விவசாயிகள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாமல் இருக்கிறது.
சுப் கரண் சிங், 21 வயதான இவர், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பலோக் கிராமத்தில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார்.
இவரது தாய் தற்போது உயிருடன் இல்லை. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அதில் ஒருவர் திருமணவர் மற்றொருவர் கல்வி பயின்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தனது சகோதரியின் திருமணத்திற்காக சுப்ரகன் கடன் வாங்கியதாகவும், 2 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், வசதி இல்லாத குடும்பம் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சுப் கரண் சிங்கின் இழப்பு அவர்களது குடும்பத்திற்கு மீளமுடியா இழப்பு என்று அக்கம்பக்கத்தினர் வறுத்தம் தெரிவித்துள்ளனர்.