பான் இந்தியா படங்களால் முடங்கிய தெலுங்கு சினிமா - என்னவாகும் தமிழ் படங்களின் படப்பிடிப்பு?

பான் இந்தியா படங்களால் முடங்கிய தெலுங்கு சினிமா - என்னவாகும் தமிழ் படங்களின் படப்பிடிப்பு?
பான் இந்தியா படங்களால் முடங்கிய தெலுங்கு சினிமா - என்னவாகும் தமிழ் படங்களின் படப்பிடிப்பு?
Published on

இன்று முதல் தெலுங்கு சினிமாத் துறை ஸ்டிரைக். பான் இந்தியா படங்களைக் குறை சொல்கிறது தியேட்டர் தரப்பு. என்ன பிரச்னை? இதனால் தமிழ் சினிமாவும் பாதிக்கப்படுமா? என்பதை பற்றி சிறுத் தொகுப்பாக இங்குப் பார்க்கலாம்.

பான் இந்தியா படங்கள் என்று அழைக்கப்படும், ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’ போன்ற படங்களை இந்திய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதேவேளையில், இதுபோன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்களால் தெலுங்கு திரையுலகம், குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் நல்லப் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்தே இன்று முதல் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு (Active Telugu Producers Guild - ATPG) வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தெலுங்கு ஃபிலிம் சேம்பரும் (Film Chamber of Commerce) ஒத்துழைப்பு வழங்குவதாக அதன் புதிய தலைவர் பாசி ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகம் என்றாலே பணம் கொழிக்கும் வகையில் மிகப் பெரிய பட்ஜெட்டுடன் பான் இந்தியா படமாக எடுக்கப்படும் என்ற மாயபிம்பம் சமீபகாலமாக வெளிப்பார்வையில் நமக்கு தோன்றினாலும், இந்த பான் இந்தியா படங்களால் அங்குள்ள தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பின்பு படம் தயாரிப்பு என்பது குதிரை கொம்பாக உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளால் ஒரு படத்தை தயாரிக்க இருமடங்கு செலவு அதிகரிப்பதாக தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

நடிகர்களின் சம்பளம் படத்திற்கு படம் ஏறிக்கொண்டே செல்லுவதால், படத் தயாரிப்பு செலவும் அதிகரிப்பது முதல் காரணமாக கூறப்படுகிறது. இரண்டாவதாக பான் இந்தியா படங்களால், சிறு பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது நல்ல ஓப்பனிங் கிடைக்கப் பெறாமல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. பெரிய படங்களுக்கு பெரும் பொருட்செலவில் புரமோஷன் நடைபெறுகிறது. ஆனால் சிறு படங்களுக்கு குறைந்த அளவே புரமோஷன் செய்யப்படுகிறது.

மூன்றாவதாக பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட, திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 3 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாவதால், ஓடிடியிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை அதிகரித்து, மக்கள் திரையரங்குக்கு வரமறுப்பதாகவும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனாலும் திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைந்து நஷ்டத்தை சந்திப்பதாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களின் வசூலை ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி எனக் காட்டுவதற்காக, திரையரங்க டிக்கெட் விலையை 1000, 2000 ரூபாய் என வரைமுறை இல்லாமல் விற்பதால், மக்கள் திரையரங்கிற்கு வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’ போன்ற படங்களை தவிர மற்ற சில படங்கள் தெலுங்கில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பை மறுசீரமைப்பு செய்தப்பின்னரே தெலுங்கு படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர். பிரபாஸ், அல்லு அர்ஜூன், விஜய் தேவரகொண்டா போன்றோரின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1. மெய்நிகர் அச்சு கட்டணம் (Virtual Print Fee -VPF)

2. சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சதவிகித அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும் (தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் ஒப்புக்கொண்டப்படி லாபம்/வருவாயில் பங்கு)

3. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் நியாயப்படுத்தப்பட வேண்டும்.

4. சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிடப்படும் ஏ மற்றும் பி சென்டர்களில், சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் குறைந்தப்பட்ச டிக்கெட் விலை ரூ.100-ம், மல்டிப்ளெக்சில் ரூ.125 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும்.

5. நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதுவே சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் குறைந்தப்பட்ச டிக்கெட் விலை ரூ.122-ம், மல்டிப்ளெக்சில் ரூ.177 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும்.

6. பெரிய பட்ஜெட் படங்களுக்கு இதுவே சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.177-ம், மல்டிப்ளெக்சில் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும்.

7. சினிமா தொழிலாளர்களின் தினக்கூலியில் திருத்தம் செய்யவேண்டும்.

8. படங்களின் திரையரங்க வெளியீடுகள் மற்றும் வெளியீட்டு தேதிகளை நெறிப்படுத்த வேண்டும்.

9. திரையரங்குகளில் வெளியானப் பின்பு ஓடிடியில் ஒரு படம் வெளியிடப்படும் இடைவெளி குறைந்தப்பட்சம் 6 அல்லது 10 வாரம் இருக்க வேண்டும் உள்பட பல அம்சங்களை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் 24 வகையான சங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமூக நடவடிக்கை எடுத்தப் பின்னரே மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் எனவும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர் பாசி ரெட்டி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளருமான தில் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், திரையரங்குகளில் பார்வையாளர்களின் ஆதரவு குறைவு, திரையரங்கு டிக்கெட் விலை, ஓடிடியில் புதிய வெளியீடுகள் மற்றும் தயாரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், கொரோனா காலத்திற்குப் பிறகு பல மாற்றங்கள் வந்துள்ளன என்றும், மாறிவரும் சூழ்நிலையில் எப்படி திரையுலகம் முன்னேறுவது என்று அமர்ந்து விவாதிப்போம் என்றும் தில் ராஜு கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகத்தின் இந்த வேலைநிறுத்தத்தால் தமிழ் திரையுலகிற்கும் பாதிப்பு ஏற்படும் என்றே கூறப்பட்டது. ஏனெனில், விஜயின் ‘வாரிசு’, அஜித்தின் ‘ஏ.கே. 61’, ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘வாத்தி’ போன்ற படங்களின் படப்பிடிப்பு தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் நடைபெற்று வருகிறது, நடைபெறப் போகிறது. ஆனால் தெலுங்குப் படங்களின் தயாரிப்பை மட்டுமே நிறுத்திவைத்திருப்பதாகவும், இதனால் தமிழ் படங்களுக்கான படப்பிடிப்புகளோ, மற்ற மாநிலப் படங்களோ படப்பிடிப்போ நடத்த தடையில்லை என்றும், இந்த வேலைநிறுத்தத்தால், மற்ற மொழி படப்பிடிப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்தே விசாகப்பட்டினத்திற்கு ‘வாரிசு’ படத்திற்கான படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் நேற்று சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

அத்துடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், தெலுங்கில் இந்த மாதம் வெளியாகவுள்ள ‘சீதா ராமம்’, ‘பிம்பிஷரா’, ‘கார்த்திகேயா 2’, ‘லிகர்’ போன்ற படங்களை வெளியிடவும் தடையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏமாற்றத்தை தந்துள்ளது என்றே சொல்லப்படுகிறது.

பான் இந்தியா படங்களால், இந்தி (ஷம்ஷெரா, பிருத்விராஜ், ரன்வே 34, தாக்கட்), தமிழ் (வீரமே வாகை சூடும், வலிமை, பீஸ்ட்) திரையுலகம் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் மற்றும் அதிகளவிலான வசூலைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கும், நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் திரையுலக நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகம் போன்றே, கோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகமும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும், விரைவில் அதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com