சேவல் சண்டையின் போது மிரண்டு போன சேவல் ஒன்று பறந்தபோது அதன் காலில் கட்டியிருந்த கத்தி சேவலின் உரிமையாளரின் உடம்பை பதம் பார்த்தது.
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள லோத்தனுர் என்ற கிராமத்தில் சேவல் சண்டை விடுவதில் 16 பேர் ஈடுபட்டிருந்தனர். அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில் கூர்மையான கத்தி கட்டப்பட்டிருந்தது. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.
அதை உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால் அவரை தாக்கியது. அப்போது காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவரின் உடம்பை பதம் பார்த்தது. படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார். பலியானவர் அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருப்போரை தேடி வருகின்றனர். மேலும் சேவல்களை பறிமுதல் செய்து கோழிப் பண்ணையில் விட்டனர்.
சேவல் சண்டைக்காகவே பிரத்யேகமாக சேவல்கள் வளர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன. இது போன்ற சேவல்களின் கால்களில் 7.5 செ.மீ நீளம் கொண்ட கத்திகளை கட்டி, எதிராளியின் சேவல் கொல்லப்படும் வரை சண்டையிட செய்கின்றனர். இதற்காக சேவல்களின் மீது பணம் வைத்து சூதாடுகின்றனர். இது போன்ற சண்டைகளில் ஓராண்டில் ஆயிரக்கணக்கான சேவல்கள் உயிரிழப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.