தெலங்கானாவில் சிறையில் அடைக்கப்பட்ட சேவல்! ஏன் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி
தெலங்கானா மாநிலம், மகபூபநகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி என்கிற கிராமம் உள்ளது. இங்கு, சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு சென்றுள்ளான். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்தச் சிறுவன் சேவலை திருடிக்கொண்டு செல்வதாக நம்பி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்துவதற்காக அந்தச் சிறுவனுடன் சேவலையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். அந்தச் சிறுவன் 18 வயதை நிரம்பாததால், அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். அதேநேரத்தில், அந்தச் சேவல் யாருடையது என்பது தெரியாததால், அதாவது, ’சேவலைக் காணவில்லை’ என அதற்குரியவர்கள் புகார் அளிக்காததால், அதை போலீசார் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி ரமேஷ்பாபு, சேவலை சிறையிலேயே அடைத்து வைத்து, அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தார். இந்தச் செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாய்ப் பரவ மக்கள் பலரும் காவல் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலைப் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, கொலை வழக்கு ஒன்றில், சேவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.