சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவிடம் நேற்று 6 மணிநேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து இன்றும் அவர் ஆஜராகிறார்.
லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேராவிற்கு வீடு உள்ளதாவும், அச்சொத்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் வதேராவை கைது செய்ய வரும் 16-ஆம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராபர்ட் வதேரா வந்தார். அவரை அவரது மனைவி பிரியங்கா காந்தி காரில் வந்து இறக்கிவிட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “அவர் என் கணவர், அவர் என் குடும்பம். அவருக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஏன் இது நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்தார்.
இதையடுத்து லண்டனில் உள்ள அசையா சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன..? பணப்பரிமாற்றங்கள் எப்படி நடந்தது..? யாருக்கெல்லலாம் இதில் தொடர்புள்ளது..? என்பது உள்ளிட்ட கேள்விகளை வதேராவிடம் அதிகாரிகள் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு பதிலளித்த ராபர்ட் வதேரா, தனக்கு லண்டனில் சொத்துகள் ஏதும் இல்லை எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபர்ட் வதேராவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து அமலாக்கத்துறையினர் கூறுகையில், “ராபர்ட் வதேராவின் பதில்களை பதிவு செய்துகொண்டோம். அதனை பரிசீலித்த பின் மீண்டும் அடுத்தகட்ட விசாரணை நடத்துவோம்” என தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் ராபர்ட் வதேரா அமலக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார் என தெரிகிறது.
இதுகுறித்து வதேரா வழக்கறிஞர் சுமன் ஜோதி கைத்தான் கூறுகையில், “ராபர்ட் வதேராவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். இது அரசியல் ரீதியாக அவர் மீது போடப்பட்ட பொய்வழக்கு. இந்த குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா எப்போதும் மறுத்தே வருகிறார். அமலாக்கத்துறை எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறதோ அப்போது ஆஜராகுவார்.” எனத் தெரிவித்தார்.
ராபர்ட் வதேரா மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் விசாரணை அமைப்பு ஒன்றிடம் அவர் ஆஜராவது இதுவே முதல்முறை. இதனிடையே மற்றொரு வழக்கிலும் வரும் 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா ஆஜராக உள்ளார்.