இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். அந்த வகையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், “மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மோடி அரசு, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன.
வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக விவசாயச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, இந்த விஷயத்தில் பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹர்ஜித் கரேவாலே கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கங்கனா ரனாவத் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ரனாவத் ஒரு பெண். நான் அவரை மதிக்கிறேன். ஆனால், அவர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் என்று நான் உணர்கிறேன். படித்தவர் இல்லை. கல்வியறிவு பெறவில்லை, மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அவர் பெண்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முழு நாடும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பேச்சு தொடர்பாக, தொடர்ந்து விமர்சனம் எழுந்ததால் அவருக்கு பாஜக தேசிய தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானாது. இதுதொடர்பாக அவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து இரண்டு முறை விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது
இதையும் படிக்க: சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்த விவகாரம்| மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!