கேரளா: நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து தங்க நகைகளை பறித்துச் சென்ற திருடன்... திரைப்பட பாணியில் துரத்திச்சென்று மீட்ட இளைஞர்.
கொல்லத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் அபுதாபி செல்லவிருந்த தனது மனைவியை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறக்கி விட்டு, தனது வீடுநோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். வாலகம் என்ற பகுதியை அவரது கார் கடுந்தபோது, ஒரு பெண் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை தொடர்ந்து பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை அறுத்துக்கொண்டு சென்றதை காரில் இருந்த சந்தோஷ்குமார் பார்த்துள்ளார்.
உடனே தாமதிக்காமல் தனது காரில் பைக்கில் சென்ற திருடர்களை துரத்திச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கார் தங்களை விடாது துரத்தி வருவதை தெரிந்துக்கொண்ட திருடர்கள், சினிமா பாணியில் அப்பக்கம் உள்ள குறுக்கலான பாதைகளில் எல்லாம் நுழைந்து வெளியே வருகையில் காரானது திருடர்களின் பைக்கை மறித்து நின்றது.
காரிலிருந்து கீழிறங்கிய சந்தோஷ் குமார், திருடர்களை நோக்கி பிடிக்க நினைக்கையில், திருடர்களில் ஒருவன் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டால் சந்தோஷ்குமாரை அடித்துள்ளார். இதில் சந்தோஷ் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கு சூழத்தொடங்கியதும் , மற்றொரு திருடன் கீழே விழுந்த பைக்கை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
சந்தோஷ்குமாரிடம் அகப்பட்டுக்கொண்ட திருடன் தன்னிடமிருந்த நகையை அருகில் இருந்த புதரில் எரிந்துவிட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் குமார் அவரை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். அதேசமயம் தப்பி சென்ற திருடனையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மீட்ட நகையை அப்பெண்ணிடம் திருப்பி கொடுத்தனர்.
திரைப்பட காட்சியை போன்று இருந்த இந்த திருட்டு சம்பவமானது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.